முன்னாள் சுகாதார அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பதில் நீதவான் ஜயந்த டயஸ் நானாயக்கார முன்னிலையில் இன்று அவர் ஆஜர்படுத்தப்பட்டபோதே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போலி ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இன்று முற்பகல் 11.30 அளவில் பௌதாலோக மாவத்தையில் குற்றப்புலனாய்வு பிரிவினால் திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்க தொடர்பில் கிடைத்த முறைப்பாடு குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலின் போது பொதுவேட்பாளராக போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவ்வேளையில் எதிர்க்கட்சித்தலைவராக செயற்பட்ட தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான திஸ்ஸ அத்தாயக்க உள்ளிட்ட 11 பேரிடம் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
விசாரணையின் பின்னர் அதுகுறித்த அறிக்கையொன்று சட்ட மாஅதிபரிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை இலங்கை தண்டனைச் சட்டத்தின் படி போலி ஆவணம் தயாரித்த குற்றச்சாட்டு என்பதனால் அவரை கைது செய்யுமாறு சட்ட மாஅதிபர் அறிவித்திருந்துள்ளார்
No comments :
Post a Comment